வேடரும் காலனியமும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்
Description
இலங்கைத்தீவின் பூர்வீககுடிகளாக வேடர்கள் காணப்படுகின்றமை பலருக்கும் தெரிந்த விடயமாகும். அண்மைக்காலமாக வேடர் மானுடவியல் சார் பார்வைகள் பல ஆய்வாளர்களிடையே அகலித்துள்ளன. இது இலங்கையர்களான நமக்கும் மிகத் தேவையான விடயப்பொருள்தான். காரணம் இன்றைய நவீன உலகானது வரலாறு, பண்பாடு மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வாளர்களையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வகையான மானிடவியலாய்வை வேடர் சமூகத்தின்பால் தொடக்கி விட்ட பெருமை “செலிக்மனையே” சாரும்.
வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலங்கையின் வேடர் சமூகம் சார்ந்தும், அவர் தம் பண்பாடு, சடங்கார்ந்த விடயங்கள் மற்றும் மரபு சார்ந்து பல ஆதாரங்கள் தீவின் நெடுகிலும் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏன் இச்சமூகம் சார்ந்த பார்வைகளானது, இன்னமும் ஒரு பாவப்பட்ட உயிரிக்கு உதவுவதாகவும், நம்மால் தான் உதவ முடியும் என்றெண்ணிக் கொண்டு இச்சமூகத்தின்பால் பூர்வகுடியென்ற உருவைச் சிதைப்புச் செய்வதாகவும் காணப்படுகின்றன?காணப்பட்டு வருகின்றன? என்பதனை நுணுகி ஆராயும் போதுதான் அதன் பின்னுள்ள காலனியச் சிந்தனையும், அதன் சிலந்திச் சிக்கலும் பற்றி அறியக்கிடைக்கின்றது.
இன்றைய காலத்தில் காலனியாதிக்கம் பல பரிணாமங்களை மிகச்சாதுரியமாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் தனது வேலையைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மைய கால இலங்கையைப் பொறுத்த மட்டில் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலையை வைத்தல் பெரும்பான்மைச் சிந்தனை, ஆதிக்க மனோபாவம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் வேடர் சமூகங்கள் பரந்து வாழும் கிராமங்களில் தமிழ்த் தெய்வங்களான அம்மனுக்கு கோயில் கட்டுவதோ, அதை நாகரிகமாக நினைத்து வணங்கப்பண்ண வைப்பதோ, கோயிலின் பெயருடன் “ ஶ்ரீ” என்ற எழுத்தைப் புகுத்துவதோ, இன்னும் சொல்லப் போனால் ஒரு இனத்தினை அதன் பெயரையே பொதுவில் சொல்லத் தயங்கவைப்பதும் கூட பெரும்பான்மைச் சிந்தனையும் அல்ல, ஆதிக்க மனோபாவமும் அல்ல என்ற நிலை வலிந்து உருவாக்கப்படுகின்றது.